செல்போன் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள புதுநல்லூர் கிராமத்தில் 700-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் குடியிருக்கும் பகுதியில் ஒரு வீட்டின் மாடியில் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு தனியார் நிறுவனம் முடிவு செய்தது. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் ரேடியேஷன் அதிகமாக காணப்படும் என தெரிவித்து சோமங்கலம்-புதுநல்லூர் சாலையில் அமர்ந்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அதன்பின் அப்பகுதி பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனைத்தொடர்ந்து செல்போன் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ.விடம் சென்று புகார் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.