அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அனைத்து சமய நிலங்களை பயன்படுத்தும் பாதுகாப்பு சங்கத்தினர் நாராயணபுரம், மாயூரநாதர் நகர் ஆகிய பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாப்படுகை ரயில்வே கேட் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சங்க மாவட்ட தலைவர் ராயர் தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் மாநில செயலாளர் துரைராஜ், நிர்வாகிகள் கணேசன், ராமலிங்கம், பாலையா உள்பட 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் பூம்புகார் கல்லணை சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.