திரௌபதி திரைப்படத்தை இயக்கிய மோகன் ஜி இயக்கத்தில் தற்போது ருத்ர தாண்டவம் எனும் படம் அக்டோபர் 1 வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, பாஜக நிர்வாகியானஹெச்.ராஜா உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டது. படத்தைப் பார்த்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது, “போதை வஸ்துக்களால் இளைஞர்கள் பாதிக்கப்படுவதை மையமாக வைத்து படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை பாடமாக எடுத்துக்கொண்டால் நன்றாக இருக்கும். அதோடு கட்டாய மதமாற்றம் குறித்து படத்தில் கூறியிருப்பதும் பாராட்டுதலுக்குரியது. படக்குழுவினருக்கு எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசியபோது, “சினிமா என்பது பொழுதுபோக்குக்காக மட்டும் இல்லை. மக்களுக்கு நல்ல தகவல்களையும் பல உண்மைகளையும் உணர்த்துவதற்கு இது வழிவகுக்கும். அவ்வகையில் போதையினால் தங்கள் வாழ்க்கையையே பறிகொடுக்கும் இளைஞர்களுக்கு இது படமாக இருக்காது பாடமாக இருக்கும். திரௌபதி படத்தைப் போன்று ருத்ரதாண்டவம் படமும் நல்ல வரவேற்பை பெற்றுக்கொடுக்கும். சாதாரணமான சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஜாதி தொடர்புடைய பிரச்சனையாக மாற்றுபவர்களுக்கு மிடுக்கு பேச்சின் மூலமாக படம் எச்சரித்திருக்கிறது” எனக் கூறியுள்ளார்.