ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 220 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
உக்ரைனின் ரஷ்யா போரானது தொடர்ந்து எட்டு மாதங்களாக நீடித்து வருகின்றது. இதில் உக்ரைனின் பல்வேறு பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது. அப்படி ரஷ்யப்படைகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை தன் வசம் இணைத்துக் கொண்டது. இதனால் மிகுந்த கோபமடைந்த உக்ரைன் ராணுவ படைகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நான்கு பிராந்தியங்களை மீட்பதற்கு ரஷ்ய படைகளுடன் தீவிரமாக சண்டையிட்டு வருகின்றது.
அதன்படி குப்பியான்ஸ் நகரை மீட்டெடுக்க உக்ரைன் ராணுவம் போராடி வரும் வேளையில் ரஷ்யப்படைகள் நடத்திய தாக்குதலில் உக்ரைன் வீரர்கள் 220 பேர் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை ரஷ்ய ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய ராணுவ அமைச்சகம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் “குப்பியான்ஸ் நகரை கைப்பற்றுவதற்கு எதிரி படைகள் தீவிரமாக தாக்குதல் நடத்த முயன்றன. ஆனால் எதிரி படைகளின் அனைத்து தாக்குதல்களும் ரஷ்ய ராணுவத்தால் முறியடிக்கப்பட்டுள்ளது. மேலும் 220 உக்ரைன் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அது மட்டுமில்லாமல் ஐந்து காலாட்படை சண்டை வாகனங்கள் இரண்டு பீரங்கிகள் மற்றும் நான்கு கார்களும் அழிக்கப்பட்டுள்ளது” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.