கோவில்களுக்குள் பூ, பழங்கள் உள்ளிட்டவற்றை கொண்டு வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து கோவில்கள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் பொதுமக்கள் தரிசனத்திற்கு அனுமதிக்காமல் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கில் ஒரு சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் குறைவாக வருமானம் தரக்கூடிய கிராமப்பகுதிகளில் இருக்கக்கூடிய கோவில்களை திறக்க தொடர்ந்து பல மாவட்டங்களில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் கோவில்கள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் உள்ளிட்டவற்றை திறப்பதற்காக அது சம்பந்தப்பட்ட நிர்வாகிகள், அதிகாரிகளை நேரில் வரவழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் கோவிலுக்கு செல்லக்கூடாது. அவர்கள் வீட்டிலேயே தங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபட்டு கொள்ள வேண்டும். அதேபோல் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் நபர்கள் முறையாக சமூக இடைவெளியை கடைபிடிக்கவேண்டும். முககவசம் எப்போதும் அணிந்திருக்க வேண்டும். பூக்கள், காய்கள், பழங்கள் உள்ளிட்டவற்றை கோவிலுக்குள் எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.