தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு தமிழக காவல்துறை மறுப்பு தெரிவித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனைகளின் அடிப்படையில் காவல்துறை ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறியதால், நவம்பர் 6-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் பாஜகவினர் ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்துவதில் தீவிரமாக இருக்கின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக தற்போது பாஜகவின் பிசி அணி மாநில செயலாளர் சூர்யா சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, நித்தியானந்தா தர்ம ரட்சகர் விருதை வழங்கியதில் எனக்கு 100% மகிழ்ச்சி. நான் இந்து மதத்தை பெருமையாக பேசுவதால் தான் எனக்கு இந்த விருதை கொடுத்துள்ளனர். இந்து மதம் பெரும்பான்மையான மதமாக இருக்கும் போதிலும் அதைப் பற்றி பேசுவதற்கு யாருமே இல்லை என்பது தான் உண்மை என்றார்.
அதன்பிறகு செய்தியாளர் ஒருவர் ஆர்எஸ்எஸ் பேரணி பல்வேறு விதமான விவாதங்கள் நடைபெற்று வருகிறதே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு சூர்யா கூறியதாவது, ஆர்எஸ்எஸ் பேரணியை நடத்தவே கூடாது என சிலர் நினைக்கலாம். ஆனால் 100 சதவீதம் நடந்தே தீரும். அதை யாராலும் தடுக்கவே முடியாது. எப்படிப்பட்ட சூழ்நிலையாக இருந்தாலும் கண்டிப்பாக ஆர்எஸ்எஸ் பேரணி நடைபெறும். மேலும் திருமாவளவன் மட்டுமல்ல தமிழக முதல்வரே நினைத்தாலும் கூட ஆர்எஸ்எஸ் பேரணியை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்.