விபத்தில் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக-கர்நாடக எல்லையான ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தபோது தலைமைக்காவலர் சேட்டு விபத்தில் பலியானார். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தருவதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினத்தை சேர்ந்த சேட்டு என்பவர் ஓசூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று இவர் கர்நாடக – தமிழக எல்லையில் உள்ள ஜூஜூவாடியில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக அமைக்கப்பட்ட சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரிக்கு பின்னால் வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து கண்டெய்னர் லாரி மீது மோதியது. இதனால் தடுமாறிய கன்டெய்னர் லாரி அங்கிருந்த தடுப்பு மீது மோதியது. அங்கு நின்றுகொண்டிருந்த தலைமை காவலர் சேட்டு மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பணியின் போது உயிரிழந்த காவல் அதிகாரியின் குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ.50 லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளார். மேலும், அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் வழங்குவதாக கூறியுள்ளார். மேலும் தகுதியின் அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக கூறியுள்ளார்.