மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் வருவாய்துறை மந்திரி கரண் சிங் வர்மா. இவர் தற்போது பாஜக சார்பில் போட்டியிட்டு இச்சாவர் தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். இவர் இச்சாவர் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு டீக்கடைக்காரர் திடீரென எம்எல்ஏ சென்ற காரை வழிமறித்தார். இந்த டீக்கடைக்காரர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் டீக்கடையில் சாப்பிட்டு விட்டு தராமல் உள்ள பாக்கி பணம் 30 ஆயிரத்தை கேட்டார்.
கடந்த 4 வருடங்களாக பணத்தை திருப்பி தராததால் உடனடியாக பணத்தை திரும்ப தர டீக்கடைக்காரர் வலியுறுத்தினார். உடனே எம்எல்ஏ டீக்கடைகாரடம் கூடிய விரைவில் கடன் பாக்கியத்தை தருவதாக கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றார். தன்னுடைய சொந்த தொகுதி மக்கள் முன்னால் கடன் பாக்கியை டீக்கடைக்காரர் கேட்டது எம்எல்ஏவுக்கு அவமானமாக அமைந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.