கேரளாவில் இன்று 12 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று உறுதியாகியுள்ளதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கண்ணூர் மற்றும் காசராகோடு பகுதிகளில் தலா 4, மலப்புரத்தில் 2, கொல்லம் மற்றும் திருவனந்தபுரம் பகுதிகளில் தலா ஒருவரும் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் கூறினார்.
இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 357 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதுவரை 8 வெளிநாட்டவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். அதில் சிலர் மோசமான நிலையில் உள்ளதாகவும், சிலருக்கு சோதனையில் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல சிலர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர் என பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மேலும் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் வரும் 14ம் தேதியோடு முடிவடைய உள்ளது. மேலும் இன்று 16வது நாளாக ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில் உள்ளதால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கையும் வைக்கப்பட்டது.
அதனடிப்படையில், ஊரடங்கை நீடிப்பது குறித்து அனைத்து மாநில முதல்வர்களுடன் ஏப்ரல் 14 தேதி பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளார். இந்த நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக ” கேரளாவில் உள்ள அனைத்து மீனவர்களுக்கும் தலா ரூ.2000 வழங்கப்படும் என முதல்வர் கூறியுள்ளார். அதேபோல, லாட்டரி விற்பனையாளர்கள் மற்றும் பீடி தொழிலாளர்களுக்கு தலா ரூ.1000 நிதி உதவி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.