கொரோனவால் பாதிக்கப்பட்ட சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கருணை அடிப்படையில், தொற்று பாதித்த 34 மாநகராட்சி பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் கருணை தொகையாக வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.
சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 363 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனவால் 5,625 பேர் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளன.
இதனை தடுக்கும் முயற்சியில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. மேலும், சென்னையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளொன்றுக்கு 3 வேளை கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாநகராட்சி ஊழியர்கள் 34 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு தொற்று பாதித்த 34 பேருக்கும் ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்குவதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.