Categories
அரசியல்

நேற்று ஒரே நாளில் ரூ.170 கோடி கல்லாகட்டிய மது விற்பனை…. 43 நாட்களுக்கு பிறகு செம வசூல்..!

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் திறந்த முதல் நாளில் மதுபானங்கள் ரூ.170 கோடிக்கு விற்பனையானது.

அதிகபட்சமாக மதுரையில் ரூ. 37 கோடிக்கு மது விற்பனை நேற்று நடைபெற்றது. சென்னை புறநகர் பகுதியில் ரூ.34 கோடியும், திருச்சி மண்டலத்தில் ரூ.32 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. சேலம் மண்டலத்தில் ரூ.33 கோடியும், கோவை மண்டலத்தில் ரூ. 34 கோடியும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக தீபாவளி, புத்தாண்டு தினங்களில் ரூ. 120 கோடி முதல் ரூ.200 கோடி வரை விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டன. இந்த நிலையில், 3 கட்டமாக மத்திய அரசு ஊரடங்கை மே 17ம் தேதி வரை நீட்டித்தபோது, சில ஊரடங்கு தளர்வையும் வெளியிட்டது. அதில் ஒன்று தான் மதுக்கடைகளை திறப்பது. மத்திய அரசின் உத்தரவை அடுத்து, கர்நாடகா, டெல்லி, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள் கடந்த 4 தேதி முதல் மது விற்பனைக்கு அனுமதி அளித்திருந்தது.

ஆனால் தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், மே 7ம் தேதி முதல் தமிழகத்திலும் மது விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. சென்னை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தடை செய்யப்பட்ட பகுதிகள் தவிர்த்த மற்ற பகுதிகளில் நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் நிபந்தனைகளுடன் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி அந்தந்தப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

இந்த நிலையில், மது விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்று காலை 10 மணிக்கு மு.க.ஸ்டாலின் தன் வீட்டு வாயிலில் கருப்பு உடையணிந்து, கருப்புக் கொடியேந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினார். ஸ்டாலின் அவர் பங்குக்கு எதிர்ப்பு தெரிவிக்க மதுபிரியர்கள் அவர்களது பங்குக்கு மதுக்கடைகளில் வரிசை கட்டினர். இதன் காரணமாக மதுக்கடை வியாபாரம் ரூ.170 கோடிக்கு கல்லா காட்டியுள்ளது.

Categories

Tech |