தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வெளியம்பாக்கம் கிராமத்தில் வசித்து வரும் ராஜீவ் காந்தி என்ற ரவுடி மீது தகராறு வழக்கு, கொலை, கொலை முயற்சி மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் போன்ற பல்வேறு குற்றங்களுக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவரை கொலை முயற்சி வழக்கு தொடர்பாக விழுப்புரம் தாலுகா காவல் துறையினர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர். அதன்பின் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட பிறகும், ராஜீவ்காந்தி திருந்தாமல் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் ராஜீவ் காந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன்படி மாவட்ட கலெக்டர் ராஜீவ்காந்தியை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யுமாறு காவல்துறை சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனை அடுத்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ராஜீவ் காந்தியைக் கைது செய்த காவல்துறையினர் அதற்கான உத்தரவு நகலை ராஜீவ் காந்திக்கு கடலூர் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கியுள்ளனர்.