இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் இஸ்ரோ ஆந்திர மாநிலத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இந்த விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன் தினம் நள்ளிரவு 36 செயற்கைக்கோள்களுடன் ஜிஎஸ்எல்வி மார்க 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. இதனையடுத்து இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். தற்போது ஜிஎஸ்எல்வி 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை விண்ணில் ஏவி நாங்கள் இப்போதே தீபாவளி பண்டிகையை தொடங்கி விட்டோம். இது ஒரு வரலாற்று சம்பவமாகும்.
இது பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவால் சாத்தியமானது. அதன் பிறகு டிசம்பர் மாதத்தின் இறுதியில் ஜிஎஸ்எல்வி 2-வது ராக்கெட் விண்ணில் ஏவப்பட இருக்கிறது. அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் சந்திராயன் 2 திட்டத்தை தொடங்க இருக்கிறோம். இதன் சோதனை பணிகள் தற்போது நடைபெற்று வருவதால் அடுத்த ஆண்டு பணியை தொடங்க இருக்கிறோம். இதனையடுத்து மனிதனை விண்ணுக்கு அனுப்பும் சுகன்யா ராக்கெட்டிலும் எல்விஎம் 3 ராக்கெட் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
இந்த ராக்கெட்டில் மனிதர்கள் செல்ல இருப்பதால், 4 மடங்கு பாதுகாப்பு அம்சங்களும் அதிகரிக்கும். அடுத்த வருடம் ஒன் வெப் நிறுவனத்திற்கு சொந்தமான 36 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவின் 2-வது மிகப்பெரிய விண்வெளி மையத்தை தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் அமைப்பதற்கு திட்டமிட்ட நிலையில், தமிழக அரசு அதற்கான முழு நிலத்தையும் வழங்கியுள்ளது. இங்கு தற்போது பாதுகாப்பு கருதி சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பகுதியில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான திட்டம் தயாராக இருப்பதால் 2 வருடத்தில் பணிகளை நிறைவு செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் முடிவடையா விட்டாலும் ஒரு ராக்கெட்டை இங்கிருந்து விண்வெளி ஏவுவதற்கு திட்டமிட்டுள்ளோம். மேலும் கிரெயோஜெனிக் எஞ்சினில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக செயல்படும் வகையில் மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என்று கூறினார்.