கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் செந்தில்குமார் என்பவர் பல்பொருள் அங்காடி வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்காக வந்தவர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 25 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
செந்தில்குமாரின் கடைக்கு எதிரே இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் ஒன்று உள்ளது. அந்த நிறுவனத்தில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே இருந்த புதிய இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இது குறித்து மங்களமேடு காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் காவல்துறையினர் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒரே பகுதியில் உள்ள 2 கடைகளில் நடந்த கொள்ளை சம்பவம் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.