பேஸ்புக் மூலம் அறிமுகமான நண்பரிடம் செயின் மற்றும் பணத்தை பறித்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள குயிலாப்பாளையம் மார்க்கெட் பகுதியில் வாஞ்சிநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இறுதியாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திலுள்ள மோகன பகுதியில் வசித்து வரும் சந்தோஷ் என்பவருக்கும், வாஞ்சிநாதனுக்கு பேஸ்புக் மூலம் நட்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தோசை தொடர்பு கொண்ட வாஞ்சிநாதன், உனக்கு புதிய செல்போன் வாங்கியுள்ளேன் என்றும், புதுவை-திண்டிவனம் புறவழி சாலையில் இருக்கும் மாட்டுக்காரன் சாவடிக்கு வந்து அதனை பெற்றுக் கொள் என்றும் கூறியுள்ளார். அவர் கூறியதை நம்பி மாட்டுக்காரன் சாவடிக்கு சந்தோஷ் சென்றுள்ளார்.
அப்போது தனது நண்பர்களான லோகேஷ் மற்றும் வெற்றி போன்றோருடன் பதுங்கியிருந்த வாஞ்சிநாதன் திடீரென கத்தியை காட்டி மிரட்டி சந்தோஷிடம் இருந்து 2000 ரூபாய் பணம் மற்றும் அவர் அணிந்திருந்த தங்கச் செயினை பறித்து விட்டு சென்றுவிட்டனர். இச்சம்பவம் குறித்து ஆரோவில் காவல் நிலையத்தில் சந்தோஷ் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் குயிலாப்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த வாஞ்சிநாதனை கைது செய்ததோடு, அவர் பறித்து சென்ற தங்க செயின் மற்றும் 2000 பணத்தை பறிமுதல் செய்து விட்டனர். அதோடு இந்த குற்றத்திற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான இரண்டு பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.