வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ரங்காபுரம் பகுதியில் பக்தவச்சலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் பக்தவச்சலம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று வெளியூருக்கு சென்றுள்ளார். இதையடுத்து திங்கட்கிழமை அன்று மாலை வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அங்கு வீட்டின் கதவு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது.
அதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தவச்சலம் வீட்டின் உள்ளே சென்று வீட்டை பரிசோதித்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் பீரோவில் இருந்த ரூபாய் ஒரு லட்சம் பணம் மற்றும் 4 பவுன் தங்க நகை ஆகியவை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. பக்தவச்சலம் இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆம்பூர் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் ஆம்பூர் காவல் துறையினர் மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.