குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதியில் இருந்து செம்பகொல்லி வரை தார் சாலை உள்ளது. இந்த தார் சாலையை பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் போக்குவரத்திற்காக பயன்படுத்துகின்றனர். இந்த தார் சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிப்பதால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பழுதடைந்து நின்று விடுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அவசர கால கட்டங்களில் இந்த தார் சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் மழைக்காலங்களில் சாலையில் இருக்கும் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனை தொடர்ந்து வனவிலங்குகள் துரத்தினால் கூட அந்த சாலை வழியாக தப்பித்து வேகமாக ஓட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.