பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரியா சக்ரபோர்த்தியை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இவ்வழக்கில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த்தின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவை தனித்தனியே வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சுஷாந்த்தின் மரணத்தில் போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையாளர்களுக்கு தொடர்பிருப்பது தெரியவந்ததையடுத்து நடிகர் ரியாவின் சகோதரர் ஷோவிக், சுஷாந்த்தின் முன்னாள் மேலாளர் சாமுவேல் மிராண்டா, வீட்டுப் பணியாளர் திபேஷ் ஷவ்வந்த் உள்ளிட்டோரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
இதனைத்தொடர்ந்து நடிகை ரியா சக்ரபோர்த்தியிடம் தொடர்ந்து மூன்று நாட்களாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மூன்றாம் நாள் விசாரணை நிறைவுற்ற நிலையில் நடிகை ரியா சக்ரபோர்த்தி கைது செய்யப்பட்டார். போதை பொருள் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் நடிகை ரியா மீது வழக்கு பதியப்பட்டது.
இதனையடுத்து நடிகை ரியா சக்ரபோர்த்திக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் கோரி ரியா சக்ரபோர்த்தி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த சிறப்பு நீதிமன்றம், 14 நாட்களுக்கு அதாவது வரும் 22ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. ரியா சக்ரபோர்த்தி முறைப்படி நேற்று சிறைக்கு அனுப்பப்படுவார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.