சென்னையில் வீடு வீடாக சென்று மக்கள் உடல்நிலை குறித்து ஆய்வு செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் விளக்கம் அளித்து வருகிறார். தனது உரையில் முதல்வர் கூறியதாவது, சென்னையில் அதிகமான குறுகலான தெருக்கள் உள்ளன. சுமார் 87 லட்சம் பேர் வசித்து வருகின்றனர்.
மக்கள் நெருக்கம் அதிகமாக உள்ளதால் தொற்று எளிதாக பரவுகிறது என தெரிவித்துள்ளார். சென்னையில் 17,500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் சென்னையில், கொரோனா பரவலை தடுக்க 6 அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காய்ச்சலை கண்டறிய 600 முகாம்கள் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், பொதுமக்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மதுரை மாநகராட்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார். வருவாய், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறை பணியாளர்களுக்கும் நன்றி எனக்கூறிய அவர் கொரோனா தடுப்பு பணியில் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி வருகின்றனர் என தெரிவித்தார்.
காவல், கூட்டுறவு போன்ற துறையினர், அரசு அதிகாரிகள், தன்னார்வலர்களுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்தார். அதிக தொற்று உள்ள பகுதிகளில் அதிக பரிசோதனை செய்ய ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என கூறினார். வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும், நோய் அறிகுறி உள்ளவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.