ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளிநாடுகளில் பணிபுரிந்த தொழிலார்களுக்கு மாவட்ட தொழில் மையம் சார்பில் கடனுதவி வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டிலிருந்து சொந்த ஊருக்கு திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான திட்டம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொழில் மையத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் உற்பத்தி மற்றும் சேவை தொழில் தொடங்குபவர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் அதிகபட்ச மானியமாக 50 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படும் என்றும், திட்ட முதலீடாக 10 லட்சம் முதல் 5 கோடி வரை கடன் உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து இத்திட்டத்தில் கடனுதவி பெற கல்வி தகுதியாக டிகிரி, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் தொழிற்கல்வி கற்றிருக்க வேண்டும் என அறிவித்துள்ளனர். இதற்கு வயது வரம்பாக பொதுப் பிரிவினருக்கு 21 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும், சிறப்பு பிரிவினருக்கு 25 முதல் 55 வயத்துக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும் வெளிநாட்டில் தகுதியுள்ள ஆவணங்கள் மூலம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பயன்பெற முடியும் என தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தொழில் மையத்தை அணுகி தகுதியான நபர்கள் கடன் உதவி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.