உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்துவது குறித்து அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய நிறுவனத்தின் தலைவர் கோரிக்கை வைத்துள்ளார்
உலக சுகாதார நிறுவனம் சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கொரோனாபரவலை தவறாக கணித்ததாகவும் அதிபர் டிரம்ப் குற்றம் சுமத்தி அந்த அமைப்பிற்கு வழங்கிவந்த நிதியை நிறுத்து உள்ளதாக அறிவித்தார். தொற்றிற்கு எதிராக உலக நாடுகள் முழுவதும் போராடி வரும் இச்சூழலில் டிரம்பின் இந்த முடிவு அனைத்து நாடுகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு உலக சுகாதார அமைப்புக்கு பின்னடைவாக இருந்தது.
இந்நிலையில் நிதி கொடுக்க மறுத்த அமெரிக்காவின் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் பேசுகையில், “உலக சுகாதார அமைப்புக்கு அதிக அளவு நிதி கொடுக்கும் நாடு அமெரிக்கா. அதை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம், பாராட்டுகிறோம். நான் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பொழுது எத்தியோப்பியா நாட்டில் மருத்துவமனை கட்டுவதற்கு அமெரிக்காவின் நிதி அதிக அளவில் பயன்பட்டது.
நிதி உதவி என்பது மற்ற நாடுகளை காப்பாற்றுவதற்கு மட்டுமல்ல அமெரிக்கா பாதுகாப்பாக இருப்பதற்கும் உதவும் என அந்நாடு உணர்ந்து கொள்ளும் என்று நம்புகிறேன். எனவே பல உயிர்களை காப்பாற்ற உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்க நிறுத்தப்பட்ட நிதியுதவியை மீண்டும் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.