கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு குறித்து மத்திய அரசு மாநில அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமுலில் இருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் பலரும் அவரவர் மாநிலம் செல்ல முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். நேற்று தலைநகர் டெல்லியில் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்துக்கு திரும்ப டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் மொத்தமாக கூடினர்.
அவர்களை அழைத்துச் செல்ல 1000 பேருந்துக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் சமூக பரவல் குறித்த அச்சமோ , விழிப்புணர்வோ இன்றி, லட்சக்கணக்கானோர் கூட்டமாக ஊருக்கு செல்வதால் கொரோனா வைரஸ் சமூக தொற்று என்ற 3ஆம் நிலை அபாயத்தை எட்டிவிடுமோ என்ற அச்சம் எழுந்தது. தலைநகர் டெல்லியில் மொத்தமாக கூடியதால் நாட்டின் ஊரடங்கு மீறப்பட்டது.
இதனையடுத்து மத்திய அரசு அனைத்து மாநில அரசுக்கும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றது. இதில் நகரங்களில் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர்களின் ஊதியம் உள்ளிட்ட தேவைகளை நிறைவேற்றவும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
இடம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள், மாணவர்களை வெளியேற்றக் கூறுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநில நகரங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து செல்வதைக் கட்டுப்படுத்தவும் அனைத்து மாநில அரசுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.