ஐ.ஐ.டி ஆராய்ச்சி மாணவர் 11 பக்க கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள ஐ.ஐ.டி வளாகத்தில் உடல் முழுவதும் எரிந்த நிலையில் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் எரிந்த நிலையில் இருந்த அந்த ஆணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த நபர் கேரளா மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் பகுதியில் வசித்த உன்னிகிருஷ்ணன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்த மாணவர் சென்னை ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி மாணவராக இருந்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேளச்சேரியில் அறை எடுத்து உன்னிகிருஷ்ணன் தனது நண்பருடன் தங்கி ஐ.ஐ.டி-க்கு சென்று வந்துள்ளார். இதனை தொடர்ந்து உன்னிகிருஷ்ணன் தங்கியிருந்த அறையில் காவல்துறையினர் சோதனை செய்த போது அவர் எழுதி வைத்த 11 பக்க கடிதம் சிக்கியுள்ளது. அந்த கடிதத்தில் பெற்றோரைப் பிரிந்து தன்னால் தனியாக தங்கியிருந்து படிக்க முடியவில்லை எனவும், ஆய்வுக்கான பாடம் கடினமாக இருப்பதால் தன்னால் சாதிக்க முடியாது எனவும் எழுதியுள்ளார். மேலும் தனது தற்கொலைக்கு யாரும் காரணமில்லை என உன்னிகிருஷ்ணன் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.