நாய்கள் மற்றும் பன்றிகளால் கடித்து குதறப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தையின் உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எறையூர் காந்தி நகரில் தேவராஜ் என்ற துரைப்பாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கருவேலமர காடு இருக்கிறது. அந்த காட்டின் வழியாக சென்ற சிலர், அங்கிருக்கும் நாய்கள் மற்றும் பன்றிகளால் ஒரு பச்சிளம் குழந்தையின் உடலை இழுத்துக்கொண்டு வந்ததைப் பார்த்ததும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதன்பிறகு நாய்கள் மற்றும் பன்றிகளை விரட்டி விட்டு குழந்தையின் அருகே சென்று பார்த்தபோது, அது 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை என்பது தெரியவந்துள்ளது.
இந்நிலையில் பச்சிளம் குழந்தையை நாய்கள் மற்றும் பன்றிகள் கடித்து குதறியதால் குழந்தையின் உடல் சிதைந்து காணப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிறந்து 10 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை இறந்தது குறித்து பல கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.