புதுக்கோட்டை மாவட்டத்தில் ரேஷன் கடையிலிருந்து ரேஷன் அரிசி கடத்தி செல்ல முயன்ற வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அம்மாப்பட்டினம் பகுதியில் ரேஷன் கடை அமைந்துள்ளது. அந்த ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவதாக மணல்மேல்குடி தாசில்தார் ஜமுனாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் தாசில்தார் ஜமுனா, வருவாய் ஆய்வாளர் அருள்செல்வம் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளனர். அப்போது சரக்கு வேனில் 1,500 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த சரக்கு வேனிலிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சரக்கு வேனை அதிகாரிகள் பறிமுதல் செய்து குடிமைப்பொருள் குற்ற புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் ரேஷன் அரிசி கடத்துவதற்கு உறுதுணையாக இருந்த விற்பனையாளர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென தாசில்தார் ஜமுனா உத்தரவிட்டுள்ளார்.