வெளிமாநிலத்திற்கு கடத்தப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளிலிருந்து சட்டவிரோதமாக அரிசி கடத்தப்படுவதாக காவல்துறை அதிகாரி கணேஷிற்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி காவல்துறை அதிகாரிகள் மகாலிங்கம், பென்சிங், திருமணி, மாணிக்கராஜ், முத்துப்பாண்டி, சாமுவேல், செந்தில் ஆகியோர் கொண்ட குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயத்தில் சிலுவைப்பட்டி பகுதியில் உள்ள குடோனில் இருந்து சில முட்டைகளை ஒரு கும்பல் டெம்போ வேனில் ஏற்றுவதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினரைப் பார்த்ததும் மர்மகும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். ஆனால் காவல்துறையினர் அதில் ஒருவரை விரட்டி பிடித்ததோடு வண்டியில் ஏற்றப்பட்டு இருந்த மூட்டைகளை ஆய்வு செய்தபோது அவை சட்டவிரோதமாக கடத்தப்படவிருந்த ரேஷன்அரிசி என்பது உறுதியாகி உள்ளது.
அதோடு குடோனில் நடத்தப்பட்ட சோதனையில் மூட்டைகளில் பதுக்கப்பட்ட 7.1 டன் அரிசி கைப்பற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் அவர் தமிழ்மணி என்பதும், அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றிக்கொண்டு கேரளாவிற்கு செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் கைப்பற்றப்பட்ட அரிசி மூட்டைகள் மற்றும் 2 வேன்களை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய பிற குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.