பொள்ளாச்சி வழியாக கேரளாவுக்கு ரேஷன் அரிசியை நூதன முறையில் கடத்திய லாரியை காவல் துறையினர் மடக்கிப் பிடித்தனர்.
தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியை கேரள எல்லையான கோபாலபுரம், கோவிந்தாபுரம், நடுபுநி மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளின் வழியாக சில சமூக விரோதிகள் கடத்துகின்றனர். இதனால் அந்த பகுதிகளில் காவல் துறையினர் சோதனைச் சாவடிகள் அமைத்து வாகனங்களைச் சோதனை செய்து வருகின்றனர்
இந்நிலையில், நேற்று கோபாலபுரம் சோதனைச்சாவடியில் டாரஸ் லாரியை தாலுகா காவல் துறையினர் சோதனை செய்தனர். அதில் லாரியின் பக்கவாட்டில் 600 கிலோ உப்பு மூட்டைகள் வைத்து மறைத்து 16 டன் ரேஷன் அரிசி கேரளாவுக்கு கடத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த காவல் துறையினர், கேரளாவின் மலப்புரத்தைச் சேர்ந்த ஓட்டுநர் பிரசாந்தை கைது செய்து உணவு கடத்தல் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.