சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்திய இரு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள அன்னதானப்பட்டி பகுதியில் இயங்கி வரும் ரேஷன் கடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சட்டவிரோதமாக சரக்கு வாகனத்தில் அரிசி கடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகிகள் லாரியை விரட்டி பிடிக்க சென்றதால் டிரைவர் தப்பி ஓடினார். இதனை அடுத்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியில் கடத்தப்பட்ட 24 அரிசி மூடைகள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அரிசி கடத்திய குற்றத்திற்காக ரேஷன் கடை விற்பனையாளர் ரவி மற்றும் லாரி டிரைவர் செல்வராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் காவல்துறையினர் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடுத்து அதிகாரிகள் ரேஷன் கடை விற்பனையாளர் ரவியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.