மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரி டோல் கேட்டில் காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மினி லாரி ஒன்று வந்தது. இதனைப் பார்த்த மினி லாரி டிரைவர் காவல்துறையினரை பார்த்ததும் வேகமாக ஓட்டிச் சென்றார். இதனையடுத்து காவல்துறையினர் மினி லாரியை விரட்டி சென்று மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் லாரி டிரைவர் காவல்துறையினரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பின் காவல்துறையினர் லாரியை சோதனை செய்த போது மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து காவல்துறையினர் லாரியை டிரைவரை நாங்குநேரி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் குமரி மாவட்ட பகுதியில் வசிக்கும் ராஜ செல்வன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் நெல்லையிலிருந்து குமரிக்கு 8 டன் ரேஷன் அரிசி கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் ராஜ செல்வனை கைது செய்ததோடு மினி லாரி, ரேஷன் அரிசி மூட்டைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.