Categories
உலக செய்திகள்

ரஷ்யா கண்டறிந்த கொரோனா தடுப்பூசி… உலக சுகாதார அமைப்பின் கருத்து…!!!

கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் என்ற பெயரைக் கேட்டாலே உலகம் முழுவதும் அஞ்சி நடுங்குகின்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கொரோனாவின் பிடியில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் சிக்கியுள்ளன. இதற்கு முடிவு கட்ட தடுப்பூசி ஒன்று தான் மிகப்பெரிய ஆயுதம் என்றே அனைவரும் கருதுகின்றனர். அதனால் இதுவரை வேறு எந்த நோய்க்கும் இல்லாத அளவிற்கு, கொரோனாவிற்கு எதிராக உலகம் முழுவதும் 165 தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் அளித்துள்ளது. இவற்றுள் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ‘கோவிஷீல்டு’ உள்ளிட்ட ஆறு தடுப்பூசிகள் இறுதிகட்ட பரிசோதனையில் இருக்கின்றன. கொரோனாவால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று. தற்போது அந்த நாட்டின் ராணுவ அமைச்சகமும், கமலேயா தொற்றுநோயியல், நுண்ணுயிரியல் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியிருக்கிறது.

இந்த தடுப்பூசியின் பரிசோதனைகள் வெற்றி கண்டுள்ள நிலையில், விரைவில் பதிவு செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி, அந்த தடுப்பூசி தயாராகி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக நேற்று பதிவு செய்யப்பட்டது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள ரஷ்ய அதிபர் புதின், கொரோனா தடுப்பூசிக்கு ‘ஸ்புட்னிக்-வி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அது மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. மனிதர்களுக்கு ஒரு நிலையான எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. இந்த தடுப்பூசி தேவையான அனைத்து சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, சிறந்த ஆற்றல் மிக்கதாக சோதனையில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இது மிகவும் பாதுகாப்பானது என்று தெரியவந்துள்ளது” என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசி பற்றி கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, “பாதுகாப்பு ஆய்வுகளை மிக கடினமாக ஆய்வு செய்ய வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளது. இதனைத் தொடர்ந்து உலக சுகாதார அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தரிக் ஜசரேவிக் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “ரஷ்யாவின் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். தடுப்பூசிக்கு முன் தகுதி அளிப்பது பற்றிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை நடந்து கொண்டிருக்கிறது.எந்த ஒரு தடுப்பூசிக்கும் முன் தகுதி அளிப்பது என்பது தேவையான பாதுகாப்பு மற்றும் திறன் அம்சங்களை கடுமையாக மதிப்பாய்வு செய்த பின்னரே அளிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |