இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் தொடங்கியது ஆனால் கொரோனா தொற்று பரவலினால் பெரும்பாலான நாடுகள் ஊரடங்கால் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முஸ்லிம்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் முகைதீன் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் “உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கக்கூடிய தொற்று பரவாமல் தடுப்பதற்காக உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கின்றன.
அதன்படி நமது இந்திய நாட்டின் மத்திய அரசும் நமது தமிழகம் உட்பட அனைத்து மாநில அரசுகளும் இந்த வைரஸ் கிருமித் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வரிசையில் இந்த மாதம் மூன்றாம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகும் அது காலநீட்டிப்பு செய்யப்படலாம் என்றும் பேசப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் புனித ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. ஒரு மாதம் முழுவதும் பகல் நேரங்களில் அதாவது சூரியன் உதிப்பதற்கு முன் இருந்து சூரியன் மறையும் வரை எதையும் சாப்பிடாமலும் குடிக்காமலும் பசியோடும் தாகத்தோடும் இருக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமை.
அந்த கடமையை அவர்கள் நிறைவேற்றுவது மாதம் முழுக்க இரவு நேரங்களில் அதிகமான சிறப்பு தொழுகை புண்ணியம் பாடி பள்ளியில் தனித்திருத்தல் போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவர். அதோடு எல்லா நாட்களிலும் பசியோடு இருப்பவர்கள் உணவு பிரச்சனையை தீர்க்க தான தர்மங்களும் செய்வார்.இந்த வழிபாடுகளை செய்வதற்கு பள்ளிவாசலும் தளமாக இருந்து வருகின்றன. ஊரடங்கு மேலும் கால நீட்டிக்க பட்டுள்ளதால் இந்த வழமையான வணக்க வழிபாடு செய்வதில் மேலும் சிரமம் இருக்கும்.
பல்வேறு இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்து வருகின்ற போதிலும் நம் தமிழக மக்கள் குறிப்பாக நம் சமுதாய மக்கள் மத்திய மாநில அரசுகள் இந்த வைரஸ் கிருமித் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மேற்கொண்டு வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மனதார முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டியது நமது கடமை என இஸ்லாமிய மார்க்க அறிஞர்களான உலமா பெருமக்கள் அமைப்புகளின் நிர்வாகிகளும், சமுதாய புரவலர்களும், சான்றோர்களும், சமுதாய அமைப்புகளின் நிர்வாகிகளும் மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்திக் கூறிக் கொண்டிருக்கின்றனர்.
மக்களும் அதனை ஏற்று செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுவரை நாம் கட்டுக்கோப்பாக இருந்து இந்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தோம். இதே ஒத்துழைப்பு இனி வரும் காலங்களிலும் நாம் அளித்திட வேண்டும் என சமுதாய மக்களுக்கு நான் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன். இந்த வைரஸ் கிருமிகள் விரைவில் முடிவுக்கு வந்து அதற்காக அரசால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் திரும்பப் பெறப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை விரைவாக திரும்ப எல்லாம் வல்ல இறைவன் நல்ல சூழலை அமைத்து தர வேண்டும் என இந்த நேரத்தில் நாம் உளமாற பிரார்த்திக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.
அதே நேரத்தில் இந்த ஊரடங்கு மேலும் கால நீட்டிப்பு செய்யப்படுமானால் நபிகள் நாயகம் அவர்களது காலத்தில் ரமலான் சிறப்பு வணக்க வழிபாடுகள் வீடுகளிலும் நடைபெற்றுள்ளன என்ற வரலாற்றுச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு பள்ளிவாசல்களை தவிர்த்து அவரவர் வீடுகளில் அரசு வழி காட்டியுள்ளபடி சமூக இடைவெளி கடைப்பிடித்து வணக்க வழிபாடுகளை செய்து கொள்ள வேண்டிய சூழலில் நாம் இருக்கின்றோம் என்பதையும் கடமை உணர்வோடு இங்கே நினைவுபடுத்தி கொள்கிறேன்.விஷக்கிருமிகள் ஒரு பக்கம் பரவி கொண்டிருக்க விஷக் கருத்துக்களை பரப்புவது மற்றொரு பக்கம் நடத்தப்பட்டு கொண்டிருக்கின்றது.
அண்மையில் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் தான் நாட்டில் கொரோனா வைரஸ் கிருமி பரவிட காரணம் ஆகி விட்டார்கள் என அப்பட்டமாக அவதூறுகளை அபாண்டமான குற்றச்சாட்டுகளை செய்திகளாக பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஏற்ற ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதிக் கொண்டிருக்கின்றன. காட்சி ஊடகங்களில் தொடர்ந்து விவாதங்களும் மேற்கொள்ளப்பட்டன.
அதே நேரம் இந்த தொற்று சீனாவில் இருந்து தொடங்கி ஐரோப்பிய நாடுகளை தாக்கி அமெரிக்காவிற்கும் சென்று இந்தியாவிற்குள் நுழைந்துள்ளது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறியதோடு இங்கிலாந்து பிரதமருக்கும், இளவரசர் சார்லசும் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தப்லீக் ஜமாத்திற்கு சென்று வந்தவர்களா இந்த வைரஸை கடத்திச் சென்றார்கள் என்று அவதூறு பரப்புவோர்களை நோக்கி முதல்வர் பொறுப்பிலிருந்து அற்புதமாக கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இந்த நியாயக் குரல் தேவைப்படும் பொழுதெல்லாம் எழுப்பப்பட வேண்டும் என்று நான் எனது விருப்பத்தை முன் வைக்கிறேன். தமிழகத்தைப் பொருத்தவரை பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இங்கே வாழ்ந்து வந்தாலும் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவு முறை சொல்லி சகோதரத்துவத்துடன் பழகி வருகிறோம். பக்கத்து வீட்டில் யார் இருக்கிறார் அவர் நம்மை சார்ந்தவரா என்றெல்லாம் பாராமல் பாதிக்கப்பட்டவர் யாராக இருந்தாலும் தேவையுடையோர் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நம்மாலான உதவிகளை ஓடோடி சென்று செய்து கொண்டிருக்கின்றோம்.
இந்த நற்செயலை தமிழக மக்களுக்கு பரம்பரை பரம்பரையாக பிறப்போடு சேர்ந்து பின்னிப் பிணைந்துள்ள பிரிக்க முடியாத நற்குணம் ஆகும். இந்த நற்குணங்கள் தமிழ் பாரம்பரியம் என்றும் புதுப் பொலிவுடன் இருக்க வேண்டும் என நம் தமிழக மக்களையும் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு செயல் ஆற்றிட நம் நாட்டு மக்களையும் அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்” என குறிப்பிட பட்டிருந்தது.