இந்தியா – சீனா எல்லை பிரச்சனையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு நாடே துணை நிற்கும் என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்தியா – சீனா எல்லை பகுதியான லடாக்கில் கடந்த சில நாட்களாக பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. எல்லையில் சீனா தனது படைகளை குவித்தது, இதற்கு கண்டனம் தெரிவித்த இந்தியா பதிலுக்கு தங்கள் படையையும் அதிகரித்தது. இந்த நிலையில் இரு நாடுகளின் ராணுவ தலைமை தளபதிகளுடன் எல்லையில், சுஷுல் – மோல்டோ பகுதியில் பேச்சு வார்த்தை நடைபெற்றதை தொடர்ந்து, இருநாடுகளும் தங்களது படைகளை திரும்ப பெற்றனர்.
இந்த நிலையில் கடந்த 15ம் தேதி இரவு முதல் சீனா எல்லையில் உள்ள ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியானது.
இன்று காலை இந்தியா – சீனா மோதலில் காயமடைந்த 4 இந்திய வீரர்களின் உடல்நிலை கவலைக்கிடம் என கூறப்பட்டது. இதுகுறித்து முப்படை தளபதியுடன் நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் லடாக் மோதல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று காலை மீண்டும் ஆலோசனை நடத்தினார். அதில் முப்படை தலைமை தளபதி, வெளியுறவுத்துறை அமைச்சர், முப்படை தளபதிகள் பங்கேற்றனர்.
எல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பை அதிகரிக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து பேட்டியளித்த அவர், லடாக்கில் வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் தியாகம், துணிச்சலை நாடு மறக்காது என கூறியுள்ளார். ராணுவ வீரர்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது, வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குடும்பத்தினருக்கு நாடே துணை நிற்கும் என தெரிவித்த அவர் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் கூறியுள்ளார்.