ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான 7 பேரின் விடுதலை குறித்து நான்கு நாட்களில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் தண்டனை அனுபவித்த 7 பேரின் விடுதலை குறித்து மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் கவர்னர் முடிவு எடுப்பார் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது. கடந்த 2018 பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் இதுகுறித்து கவர்னர் எந்தவித முடிவும் எடுக்கவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
கவர்னரின் காலதாமதம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. நேற்றைய விசாரணையில், பேரறிவாளனை விடுதலை செய்யும் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு தான் உள்ளது என்று மத்திய அரசு கூறியிருந்தது. இன்று அம்மனு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர்கள், கவர்னர் பன்வாரிலால் மூன்று அல்லது நான்கு நாட்களில் ஏழு பேரின் விடுதலை குறித்து முடிவு எடுப்பார் என்று உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.