தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தின் 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை, நீலகிரி, தேனி, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை வடதமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
இன்று முதல் ஜூன் 19ம் தேதி வரை தென்மேற்கு, மத்திய அரபிக்கடல், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்மேற்கு, மத்திய அரபிக் கடல், மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தவிர ஜூன் 17ம் தேதி முதல் 19ம் தேதி வரை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் இந்த பகுதிகளுக்கு மேற்கண்ட தேதிகளில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.