மழை வெள்ளத்திற்கு 21 பேர் உயிரிழந்துள்ளதாக பாகிஸ்தான் அரசின் செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் பலுசிஸ்தான் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. இந்த தொடர் மழையினால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஆறு போல ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும் வீடுகள், பயிர் நிலங்கள் அனைத்தும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வரை பெய்த மழையினால் இரண்டு குழந்தைகள் காணாமல் போனதாகவும் 7 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் கெச் என்ற பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் என மொத்தம் 11 பேருடன் வந்த வாகனம் ஒன்று வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு குழுவினர் தேடுதல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு இரண்டு பேரின் உடல்களை மீட்டு மீதமுள்ளவர்களை தேடி வருகின்றனர். இதனையடுத்து இந்த மழை வெள்ளத்தினால் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 18 பேர் காயமடைந்துள்ளதாகவும் அரசு செய்தி தொடர்பு அதிகாரி லியாகத் ஷாவானி கூறியுள்ளார்.