புயல் தாக்கத்தின் காரணமாக மஸ்கட் நகரத்தின் வீதிகள் முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.
ஓமனை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று புயல் தாக்கியுள்ளது. அதற்கு சஹீன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த புயலானது மணிக்கு 120 முதல் 150 கிலோமீட்டர் வேகத்தில் கரையை கடந்துள்ளது. இதனால் கடற்கரையை ஒட்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைநகர் மஸ்கட்டில் உள்ள அனைத்து வீதிகளும் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. இருப்பினும் புயல் கரையை கடந்த பிறகு அதன் வலிமை குறைந்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிலும் ஈரானில் உள்ள சிஸ்டான் மற்றும் பலுசெஸ்தான் மாகாணத்திற்கு தென் கிழக்கில் இருக்கும் ஒரு துறைமுகத்தில் 6 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும் முன்னதாகவே ஒரு குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 9 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து வெள்ளத்தின் காரணமாக சாலைகள் பழுதடைந்துள்ளன. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் வெளியே வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனை அடுத்து தலைநகர் மஸ்கட்டிலும் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ஓமன் மற்றும் ஸ்காட்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியும் புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சாலைகள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் சேதமடைந்துள்ளதால் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள 2,700 பேர் அவசரகால பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அல்-எய்ன் பகுதியில் உள்ள மக்களும் வெளியே வர வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.