புயல் பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீட்புக்குழுவினர் முகாமிட்டு தங்கியுள்ளனர்.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழையானது தீவிரம் அடைந்துள்ளது. மேலும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது புயலாக மாறி சென்னை அருகே இன்று கரையை கடக்கவுள்ளது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் RED ALRET எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மேலும் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் 1500 போலீசார் மீட்புக்கருவிகளுடன் ஆயத்தமாக உள்ளனர்.
அதிலும் மாநில அளவில் பேரிடர் மீட்பு பயிற்சி பெற்று 57 போலீசார், சிறப்பு காவல்படையினர் 60 பேர் கொண்ட மீட்புக் குழுவினர் புயலால் பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்களை கண்டுபிடித்து அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக மாவட்ட தலைமையிடமான காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டு குழுக்களும் திண்டிவனம், விழுப்புரம், செஞ்சி, கோட்டக்குப்பம் போன்ற பகுதிகளில் ஒரு குழுவும் கடலோர பகுதியான மரக்காணத்தில் சிறப்பு குழு ஒன்று என மொத்தம் ஏழு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இவர்கள் அனைவரும் அவசரகால மீட்பு பணிக்கு தேவையான ரப்பர் படகுகள், டயர் டியூப், கயிறு, பொக்லைன் இயந்திரம், ஜெனரேட்டர், மரம் வெட்டும் இயந்திரங்கள், மண்வெட்டி, அரிவாள் போன்ற கருவிகளுடன் ஆயத்தமாக உள்ளனர். மேலும் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளான மரக்காணம், பொம்மையார்பாளையம், நடுக்குப்பம், கோட்டக்குப்பம் ஆகிய பகுதிகளில் தனித்தனி குழுக்கள் முகாமிட்டுள்ளனர். இதுமட்டுமின்றி அதிகமாக புயல் பாதிப்பு ஏற்பட கூடிய பகுதிகளை கண்டுபிடித்து அங்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.