பிரிட்டனில் கொரோனா ஊரடங்கால் இரண்டு பெண்கள் புற்று நோய்க்கான சிகிச்சை பெற முடியாமல் உயிரிழந்துள்ளனர்.
பிரிட்டனில் ஊரடங்கு காலகட்டத்தில் சிகிச்சை செய்வதற்கு தாமதமானதால் 27 வயது நிரம்பிய லதிபா கிங் மற்றும் 31 வயது நிரம்பிய கெல்லி ஸ்மித் என்ற இரண்டு பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.ஒரு குழந்தைக்கு தாயாக இருக்கும் கெல்லி ஸ்மித் என்பவர் குடல் புற்று நோய்க்காக கீமோதெரபி சிகிச்சைக்கு தயாராக இருந்துள்ளார். ஆனால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர் சிகிச்சை பெறுவதற்கு மூன்று மாத காலத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதேபோன்று லதிபா கிங் என்ற பெண்ணும் இடுப்பு கீல் வாயுவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதனால் அவர் சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்த போது கொரோனா ஊரடங்கின் காரணமாக அவரால் எந்த மருத்துவரையும் நேரில் சந்திக்க முடியாமலும் பரிசோதனை செய்ய முடியாமலும் போயுள்ளது. கடும் வலியால் அவதிப்பட்ட லதிபா இறுதியில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு மென்மையான திசு புற்றுநோய் உருவானது என்று மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்திலேயே உயிரிழந்தார். கொரோனா மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் எனது சகோதரி லதிபா இன்னும் சில வருடங்கள் உயிருடன் இருந்திருப்பார் என்று அவரது சகோதரி கூறியுள்ளார். இந்நிலையில் பிரிட்டனில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 75 பேர் ஒன்று சேர்ந்து பிரதமர் போரிஸ் ஜோன்சனிற்கு கோரிக்கை கடிதத்தை எழுதியுள்ளனர்.
அதில், “பிரிட்டனில் சுமார் ஒரு லட்சம் மக்கள் கொரோனா பரவல் காரணமாக புற்றுநோய்க்கான முக்கிய சிகிச்சை மற்றும் பரிசோதனைகளை செய்யாமல் காத்திருக்கின்றனர். கொரோனா தடுப்பூசியை செலுத்த மேற்கொள்ளப்படும் தீவிரத்தை இனி புற்றுநோய்க்கான சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் அளிக்கவேண்டும்” என்று கூறியுள்ளனர்.