ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டுடன் சேர்க்கப்பட்ட உக்ரைன் நாட்டின் பிராந்தியங்களில் ராணுவ சட்டங்களை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்.
உக்ரைன் நாட்டின் மீதான ரஷ்ய போர் எட்டு மாதங்களாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இதில் ரஷ்ய படையினர் உக்ரைன் நாட்டிடம் கைப்பற்றிய ஜபோரிஜியா, லுஹான்ஸ்க், டோனெட்ஸ்க் மற்றும் கெர்சன் போன்ற நான்கு பிராந்தியங்களை தங்கள் நாட்டோடு சேர்த்துக் கொண்டனர். உலக நாடுகள், சர்வதேச சட்டத்தை மீறி ரஷ்யா செயல்படுவதாக கண்டனம் தெரிவித்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து உக்ரைன் ராணுவம், சட்டவிரோதமான முறையில் சேர்க்கப்பட்ட அந்த நான்கு பிராந்தியங்களையும் தங்கள் நாட்டுடன் மீண்டும் இணைக்க கடும் போராட்டம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், தங்கள் நாட்டுடன் சேர்க்கப்பட்ட உக்ரைன் நாட்டின் நான்கு பிராந்தியங்களிலும் ராணுவ சட்டங்களை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.
ராணுவ சட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பற்றி அவர் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் இந்த உத்தரவு இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறியிருக்கிறார்.