விபத்தில் சேதமடைந்த காருக்கு இன்சூரன்ஸ் தொகையை தர மறுத்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள அம்பட்டையன்பட்டி கிராமத்தில் தங்கராமன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கராமனுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் தனது உறவினர்களுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காரில் வெளியே சென்றுள்ளார். அப்போது கார் விபத்தில் சிக்கியதால் தங்கராமனும், அவரது உறவினர்களும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் சேதமடைந்துவிட்டது.
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய தங்கராமன் சம்பந்தப்பட்ட கார் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கார் இன்சூரன்ஸ் செய்யப்பட்ட காலம் முடிந்து விட்டதால் இழப்பீடு தொகையை வழங்க முடியாது என அந்த நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கராமன் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராமனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் காவல்துறையினர் தங்கராமன் எழுதிய கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் எனது சாவுக்கு காரணம் என்னை ஏமாற்றிய இன்சூரன்ஸ் நிறுவனம் தான் என எழுதி வைத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.