சீன நாட்டில் அதிக அளவில் பரவிவரும் பிஎப்.7 மாறுபாடு, இந்தியாவில் இதுவரையிலும் 4 பேருக்கு கண்டறியப்பட்டு உள்ளது. பிஎப்.7 நோய் தொற்றுக்கு ஆளானவர்கள் அதிலிருந்து மீண்டு வந்திருப்பதாக சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கிறது. பிஎப்7 மாறுபாடு சீனாவில் மட்டுமல்லாது அமெரிக்கா, இங்கிலாந்து, பெல்ஜியம், ஜெர்மனி, பிரான்ஸ், டென்மார்க் ஆகிய பிற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த மாறுபாடு 2 மாதங்களுக்கு முன் தங்களது நாட்டிற்குள் நுழைந்ததை கண்டறிந்த இங்கிலாந்து, வலுவான பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் அதன் பரவலைத் தடுத்தது.
எனினும் சீனாவில் பிஎப்.7 மாறுபாடு பரவுவதற்கு அந்நாட்டிலுள்ள மக்களின் நோய் எதிர்ப்புசக்தி குறைவாக உள்ளது என்றும் தடுப்பூசி செயல்முறையை செயல்படுத்தாததும் தான் காரணங்கள் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பிஎப்7 பரவல் காரணமாக இந்தியா, சீனா இடையிலான விமானங்களுக்கு மத்திய அரசு தற்காலிக தடை விதித்து உள்ளது. அத்துடன் மற்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகளிடமிருந்து ரேண்டம் முறையில் 2 சதவீத மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய முடிவுசெய்யப்பட்டு உள்ளது.