ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு புதிதாக வந்த 58 புதிய மருத்துவர்களுக்கு சிகிச்சை முறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன்படி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள் இல்லாத நிலை இருக்கின்றது. எனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தமிழகம் முழுவதிலும் கூடுதலாக மருத்துவர்கள் பணி நியமிக்கப்பட்டனர். அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 60 புதிய மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு 58 பேர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு சென்று தங்களது பணியை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு புதிதாக வந்த மருத்துவர்களின் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு மருத்துவமனை வளாகத்தில் அவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் மருத்துவக்கல்லூரி டீன் திருவாசகமணி தலைமையில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். இதுகுறித்து டீன் திருவாசகமணி கூறியபோது புதிதாக நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் கொரோனா தொற்றின் தீவிரத்தை நன்கு உணர்ந்து கொண்டால்தான் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதனையடுத்து ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு எப்படி ஆக்சிஜன் வழங்குவது என்பதையும் புதிதாக நியமனமான மருத்துவர்கள் தெரிந்துகொண்டு பாதுகாப்பாக கையாள்வது மிக முக்கியம் ஆகும். மேலும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு முறைகள், எந்த மருந்துகளை கொடுக்க வேண்டும், கொரோனா மையத்தை பராமரிப்பது போன்றவற்றையும் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மருத்துவர்கள் தெரிந்துகொண்டு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டீன் திருவாசகமணி தெரிவித்துள்ளார்.