Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புத்தாண்டு கொண்டாட்டம்… தலைக்கு ஏறிய போதை… சகோதரர்கள் செய்த கொடூரம்…!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது நண்பரை கொலை செய்துவிட்டு அண்ணன் தம்பி தப்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை நுங்கம்பாக்கம் காம்தார் நகர் மூன்றாவது தெருவில் காதர் (56) என்பவர் வசித்து வீட்டு புரோக்கர் வேலை பார்த்து வந்தார். அவர் தன் மனைவி, குழந்தைகளை பிரிந்து இருக்கிறார். நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை முன்னிட்டு, காதர் அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்த பழனி என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். பழனியின் அண்ணன் முருகன் என்ற முஸ்தபா என்பவரும் இதில் கலந்து கொண்டார். பழனி காவலாளியாக வேலை செய்யும் வீட்டின் மாடியில் அமர்ந்து இவர்கள் மூவரும் மது அருந்தியுள்ளனர்.

அதன்பின் அவர்கள் அதிகம் குடித்து போதை அதிகமானதால் அண்ணன், தம்பியான பழனியும், முஸ்தபாவும் சொத்து பிரச்சினையை பேசி திடீரென்று சண்டை போட்டனர். காதர் அப்போது அவர்களின் சண்டையை தடுத்ததோடு பழனிக்கு சாதகமாக பேசினார். அதனால் ஆத்திரம் கொண்ட முஸ்தபா குடித்து வைத்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து பின்பு காதரை குத்தி விட்டார். ரத்த வெள்ளத்தில் மிதந்த காதர் பரிதாபமாக அதே இடத்தில் இறந்து விட்டார்.

அவர் இறந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்த முஸ்தபா, பழனி இடம் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லிவிடாதே என்று கூறி கெஞ்சியுள்ளார். அதன்பின் இருவரும் காதரின் உடலை அங்கிருந்து அகற்றி நடுரோட்டில் போட்டுவிட்டு தப்பிச்சென்றனர். நேற்று காலை காதரின் சடலத்தை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அதன்பின் காதரின் உடலை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்து விட்டு தப்பி ஓடிய முஸ்தபா மற்றும் பழனியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |