நாட்டு மக்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பிரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் தடுப்பூசியை சில நாடுகள் மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளன. சமீபத்தில் ஜப்பான் அரசு அந்நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுவதற்கான மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. இந்நிலையில் தற்போது பிரான்சில் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெஸ் கூறுகையில், “பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவருக்குமே கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்.
இதற்காக வருகிற வருடம் 1.5 பில்லியன் யூரோ நிதி ஒதுக்கப்படும். மேலும் ஐரோப்பிய ஒழுங்குமுறை விற்பனை ஆணையத்தின் ஒப்புதலுக்காக உள்ளதால் இன்னும் சில வாரங்களில் கொரோனா தடுப்பூசி குறித்து பிரச்சாரம் ஆரம்பிக்கப்படும். இந்நிலையில் பல்வேறு மருந்து நிறுவனங்களிடமிருந்து 200 மில்லியன் டோஸ் மருந்து வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பாக இருக்கும் என்று மக்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.