தாஞ்சாவூரில் தனது உரிமையாளரின் உயிரை காப்பாற்ற தனதுயிரை கொடுத்த நாயின் நன்றியுணர்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் வேங்கராயன்குடிகாடு பகுதியை சேர்ந்தவர் 50 வயதான நடராஜன். இவர் விவசாயி ஆவார் . இவருக்கு தேவகி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். நடராஜன் கடந்த நான்கு ஆண்டுகளாக பப்பி என்ற நாயை வளர்த்து வருகிறார்.இந்நிலையில் இன்று காலை பப்பியை அழைத்துக்கொண்டு நடராஜன் வயல் வெளிக்கு சென்றுள்ளார். நடராஜன் முன்னே செல்ல பப்பி பின்னே சென்றது.
திடீரென ஐந்து அடி நீளமுள்ள பாம்பு ஒன்று வயலில் இருந்து ஊர்ந்து வந்துள்ளது. அதனை கண்ட நடராஜன் அதிர்ச்சியில் அப்படியே நின்றுள்ளார். அப்போது அந்த பாம்பு நடராஜனை கடிக்க சீறியுள்ளது. இதனை பார்த்த பப்பி பாய்ந்து சென்று பாம்பைக் கடித்துக் குதறியது. இதில் பாம்பு இறந்தது. ஆனால் பாம்பை கடித்ததால் உடலில் விஷம் பரவி பப்பியும் சிறிது நேரத்தில் இறந்தது. இதனை கண்ட அவரது குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர்.