ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் அஷ்வின் கருத்து தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற 22 -வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதியது . இவ்விரு அணிகளுக்கிடையேயான போட்டி பஞ்சாப் மொஹாலி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் குவித்தது. சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 70 (62) ரன்கள் குவித்தார்.

பின்னர் 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 19. 5 ஓவரில் 4 விக்கெட் இழந்து 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக தொடக்க வீரர் கே.எல் ராகுல் 71* (53) ரன்கள் குவித்து வெற்றிக்கு வழி வகுத்தார். மேலும் மயங்க் அகர்வால் 55 (43)ரன்கள் எடுத்து வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி 4-வது வெற்றியை பதிவு செய்தது. பஞ்சாப் அணியின் சொந்த மைதானமான மொகாலியில் அதிரடிதொடர்ந்து நீடிக்கிறது.

இந்நிலையில் வெற்றி குறித்து பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பரபரப்பான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றது மிகுந்த ஆறுதலை அளிக்கிறது. இந்த வெற்றியின் மூலம் எங்களது நம்பிக்கை இன்னும் அதிகரித்துள்ளது. வெற்றியடைந்தாலும் ஆட்டத்தில் இன்னும் சில முன்னேற்றம் தேவை. மேலும் கடைசி 10 ஓவர்களில் நாங்கள் 100 ரன்களை கொடுத்து விட்டோம். அது உண்மையிலேயே கடுமையானது என்று கூறினார்.