புகையிலை பாக்கெட்டுகளை ஆட்டோவில் கடத்தி வந்த 2 நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள திருக்கோவிலூர் காவல் துறையினர் செவலை சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோவை சோதனை செய்த போது அதில் 4 மூட்டைகளில் 1,௦௦,௦௦௦ மதிப்புடைய அரசால் தடை செய்யப்பட்ட 1௦௦௦ புகையிலை பாக்கெட்டுகள் இருந்ததை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
அதன்பின் அவர்களை விசாரணை செய்த போது புகையிலை பாக்கெட்டுகளை பெங்களூருவில் இருந்து கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் இதை கடத்தி வந்த மணிமாறன் மற்றும் ராஜா ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவர்களிடமிருந்த புகையிலை பாக்கெட்டுகள் மற்றும் ஆட்டோவை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக இருக்கும் ரவிச்சந்திரன் என்பவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.