புதுச்சேரி மாநிலத்தில் திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஏழுமலை(33) என்பவர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சிவபாக்கியம்(22) என்பவரை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு சிவபாக்கியம் தனது கணவர் ஏழுமலை வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் சிவபாக்கியத்தின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போது ஏழுமலையின் குடும்பத்தினர் சிவ பாக்கியத்தை இறுதி சடங்கிற்கு தாமதமாகவே அனுப்பியுள்ளனர். இந்நிலையில் அங்கு சென்ற சிவபாக்கியம் தனது உறவினர்களிடம் கணவன் வீட்டில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக கூறியுள்ளார்.
தந்தையின் இறுதிச்சடங்கு முடிந்து மீண்டும் கணவன் வீட்டிற்கு சிவபாக்கியம் திரும்பிய நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிவ பாக்கியத்தின் உறவினர்களுக்கு ஏழுமலை போன் செய்துள்ளார். அதில், சிவபாக்கியம் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் அவரை சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளோம் என்றும் கூறியுள்ளார். இதனை கேட்டவுடன் சிவபாக்யத்தின் உறவினர்கள் மருத்துவமனைக்கு உடனடியாக விரைந்து சென்றுள்ளனர்.
அங்கு சென்றபோது சிவபாக்கியம் உயிரிழந்ததாக ஏழுமலையின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்,” சிவவாக்கியத்தின் மரணத்தில் சந்தேகம் இருக்கிறது. ஏழுமலை குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு அவரை அடித்து கொன்றுள்ளனர். ஏழுமலை மீது தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை சிவபாக்யத்தின் உடலை வாங்க மாட்டோம்” என்று கூறி காவல்நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டனர். இந்நிலையில் காவல்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பிறகு சிவ பாக்கியத்தின் உறவினர்கள் காவல் நிலையத்தை விட்டு சென்றனர்.