அரசு கட்டித் தந்த வீடுகள் தற்போது பழுதடைந்து விட்டதால் அதை திரும்பத் புதியதாக காட்டி தருமாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட காலனியில் சென்ற 1982-ஆம் ஆண்டு 35 வீடுகளை அரசு கட்டிக் கொடுத்துள்ளது. அதில் எளிமையான மற்றும் பட்டியல் இன மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இக்காலனியில் அமைந்திருக்கும் வீடுகள் தற்போது மிக பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இதனையடுத்து வீட்டின் கான்கிரீட் மேற்கூரை பகுதிகளில் பூச்சிகள் அதிகம் வருவது மட்டுமல்லாமல் மழை காலங்களில் வீட்டுக்குள்ளேயே தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காலனியில் வசிக்கும் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வீட்டின் வெளியிலே சமையல் செய்து குடும்பம் நடத்தி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தங்களுடைய உடைமைகளுடன் வீட்டிலிருந்து வெளியேறி அதே பகுதியில் இருக்கும் அம்மன் கோவிலில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில் அங்கு அவர்கள் அடுப்பு வைத்து தங்களின் பாத்திரங்களைக் கொண்டு உணவு சமைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளைக் கட்டித் தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை மனு கொடுத்தும் இதைப்பற்றி புகார் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
இந்தப் போராட்டமானது 3 மணி நேரத்திற்கும் அதிகமாக தொடர்ந்து வந்துள்ளது. இதுபற்றி தகவல் அறிந்த அதிகாரிகள் நேரில் சென்று இப்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரிகள் தங்களின் கோரிக்கை பற்றி அரசின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். அதன்பின் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் பொதுமக்களின் இந்த திடீர் போராட்டத்தினால் தடங்கம் காலனியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பில் காணப்பட்டுள்ளது.