Categories
கல்வி மாநில செய்திகள்

அந்தந்த பள்ளிகளிலேயே 5 மற்றும் 8ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு..!!

5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே தேர்வு எழுதும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் 1கி.மீ தூரம் உள்ள வேறு ஒரு பள்ளியிலும், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 கி.மீ தூரம் உள்ள வேறு ஒரு பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்தது. இந்த அறிவிப்புக்கு தமிழக  அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 5 ஆம் வகுப்பு மாணவர்கள் எப்படி தனியாக 1கிமீ தூரம் சென்று தேர்வை எழுதுவார்கள். இதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் வேலையை விட்டுவிட்டு மாணவர்களை  அழைத்து சென்று வருவது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக ஒவொருவரும் தங்களது கருத்தை தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னையில் நேற்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, 5 பேர் இருந்தாலும் 8 பேர் இருந்தாலும் தங்களது பள்ளிகளிலேயே பொது தேர்வு தேர்வு எழுதலாம். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். பயிலும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதும் வகையில் இன்று (நேற்று) மாலைக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் தற்போது 5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்க மாவட்ட தொடக்க கல்வி அலுவலகர்களுக்கு தொடக்க கல்வி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பப்பியுள்ளார்.

Categories

Tech |